Tuesday, December 16, 2014

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்க

ஓடியாடி வால் தனம் செய்யும் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் உங்கள் வீட்டில் இருக்கின்றனரா? அப்புறம் என்ன மேலே தொடருங்கள்.

உங்களுக்குத் தெரியுமா? சுய ஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால் தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது; சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. 

பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் இதோ..

முதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் குழந்தை விலை மதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிர் என்பதை நீங்கள் உணர்வதோடு அதை குழந்தையும் உணருமாறு நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி, அது எத்துணை சிறிய செயலாக இருந்தாலும், உடனுக்குடன் பாராட்டி கருத்துக்களைக் கூறுங்கள். “அது சற்று கடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையில் முயற்சித்தாய்” என்று பாராட்டுவது குழந்தையின் முகத்தையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கும்.

குழந்தைகளின் சின்னச் சின்ன தவறுகள் குற்றங்களல்ல; அவை புரிந்து வளர்வதற்கான படிப்பினைகள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.

குழந்தைகள் பேசும்போது மிகுந்த உன்னிப்பாக கவனிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனிப்பதற்கு அடையாளமாக உடனுக்குடன் கலந்துரையாடி குழந்தைகள் தொடர்ந்து பேச  உற்சாகமளியுங்கள். 

உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆமோதித்து அவற்றை வார்த்தைகளாக வெளியிட உதவுங்கள்.

விமர்சியுங்கள் - குழந்தைகளை அல்ல; குழந்தையின் பழக்க
வழக்கங்களை! இதைச் செய்யும்போது மிக கவனமாக கத்தி மீது நடப்பதுபோல செய்ய வேண்டும். அளவிற்கு அதிகமான விமர்சனம் குழந்தையைக் காயப்படுத்தும். ஆனால் ஒன்றில் உறுதியாக இருங்கள். உங்கள் விமர்சனம் குழந்தையின் பழக்க வழக்கம் அல்லது செயல் பற்றியதாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, குழந்தையைப் பற்றி
அல்ல.

குழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு
ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவனியுங்கள். முடிந்தால் இடையிடையே சில கருத்துகளையும் தெரிவியுங்கள்.

குழந்தை வெளியிடும் அதன் பயம் அல்லது பாதுகாப்பின்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள். குழந்தையின் பயம் அர்த்தமற்றதாக இருப்பினும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருப்பதாகக் கூறினால், அதை எளிதாகச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கூறி ஆறுதல் படுத்துங்கள்.

குழந்தை சுதந்திரமாக செயல்பட ஊக்கமளியுங்கள். தனியாகப் புதுப்புது முயற்சிகள் செய்ய வாய்ப்பளியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். தோல்வி வேறு
புதிய முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்தும்.

எப்பொழுதும் குழந்தையுடன் சேர்ந்து சிரித்து மகிழுங்கள்.

குழந்தைக்கு எதில் அதிக ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்த கவனம் செலுத்த குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். அது நடனமாகவோ, ஓவியமாகவோ, விளையாட்டாகவோ.. எதுவாயினும் சரி.. உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் கூட!


உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு...

நீங்கள்
பல முறை எச்சரித்தும், கேளாமல் உங்கள் குழந்தை ஒரு கையில் டம்ளர் வழிய பாலும், மற்றொரு கையில் உணவு தட்டும் கொண்டு வருகிறது. வழியில் கால் தவறி கீழே சிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?

“நான் முன்பே உன்னிடம் பல முறை எச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பாரு.. இப்போ என்ன ஆச்சுன்னு” என்பது போல இருக்கிறதா?

அப்படியென்றால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச்  சொன்னால் குழந்தையின் உணர்வுகள், கீழே சிந்தியதை விட மோசமாக பாதிக்கப்படும்.

மாறாக, இப்படிச் சொல்லிப் பாருங்கள்!

“நீ நன்றாக முயற்சி செய்தாய்.. முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை! அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத்து வா. தடுமாறாமல் எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.”

வண்ணத்துப் பூச்சி போல பறக்கும் உங்கள் குழந்தை!

எனவே, குழந்தையைத் திருத்துவதாக நினைத்து எதையும் நேரடியாகக் கூறக் கூடாது.  குழந்தையின் தன்னம்பிக்கையைக் குலைக்காத வண்ணம் எப்படிக் கூறவேண்டும் என தீர்மானித்து சொல்ல வேண்டும்.

குழந்தையின் காதுபட எவரிடமும் குழந்தையைப் பற்றி குறையாக ‘சாப்பிட அடம் பிடிக்கிறாள் ; அழுகிறாள்’ என்று அடுக்கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று குழந்தை எண்ண ஆரம்பித்து விடும். இவ்வெண்ணம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்களைப் பற்றி நீங்களே கூறும் சுயவிமர்சனமும் குழந்தையின் ஆளுமையை மாற்றக்கூடும். பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் போல.
அதிலும், தன் மனம் கவர்ந்த பெரியவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புவர்.

நீங்கள் ஏதாவது ஒரு செய்திக்கு அல்லது பிரச்சனைக்குக் கொஞ்சம்
அதிகப்படியாக அலட்டிக் கொண்டால்... அவ்வளவுதான்! குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? வாழ்வின் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று எண்ணி கவலைப்படும். இது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைச் சிதைக்கும்.

குழந்தையிடம் பேசுவதற்கு முன் நன்றாக யோசித்து சரியான
சொற்களையே தேர்ந்தெடுங்கள்! குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அல்லது அனாவசிய கேள்வி கேட்டால் ‘முட்டாள் மாதிரி செய்யாதே’, ‘நீ ரொம்ப பிடிவாதம்’ என்று குழந்தைகளைக் கடிந்து கொள்வது இயல்பு. ஆனால் இவற்றை அதிகமாக அடிக்கடி கூறுவதால் ‘நாம் அது மாதிரிதானோ’ என்ற எண்ணம் குழந்தையிடம் ஏற்படலாம். எனவே எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.

இவையெல்லாம் எளிதாக பின்பற்றக் கூடியவை. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து பின்பற்ற ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான உலகைக் காண முடியும் அல்லவா?

உங்களது மேலான கருத்துக்களையும், குழந்தைகளுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே..

Monday, December 8, 2014

குழந்தை வளர்ப்பு | சிறப்பு பதிவு

குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் எல்லோரும் கேட்கும் கேள்வி “குழந்தையின் எடை என்ன?” இது பிறந்திருக்கும் குழந்தை ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை அறிந்துக்கொள்ள இப்படி கேட்கிறோம்

குழந்தைக்கு ஒரு வருடம் ஆகும் வரை எல்லா மாதமும் குழந்தையை மருத்துவ நிபுணரிடம் காட்டி எடை, உயரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.



தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. சாப்பிட வைப்பதே பெரும்பாடாக தான் இருக்கும். அப்போதுதான் நாம் நம் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கும். குழந்தையின் வளர்ச்சியில் உயரமும், எடையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தந்த வயதுக்கு இருக்கவேண்டிய உயரத்துக்குரிய எடை நம் குழந்தை அடைந்திருக்கிறதா என்று ஒவ்வொரு மாதமும் பார்க்க வேண்டும். அதிக எடையோ, அல்லது குறைவான எடையோ இருந்தால் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

அதிக எடை:

அதிக எடை ஏற்படும் பொழுது குழந்தைகள் சர்க்கரை வியாதிக்குள்ளாகிறார்கள் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. அதீத உணவு, துரித உணவு, குறைவான உடற்பயிற்சி இவைதான் குண்டு குழந்தைகளுக்கான காரணங்கள். இதனை சரி செய்து சரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து சரியான எடைக்கு கொண்டு வந்துவிடலாம்.

குறைவான எடை:

இந்தவகை குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பல. உடலில் தெம்பில்லாது போவதால் சோம்பலாக இருப்பார்கள். அதிகம் ஓடியாடி விளையாட முடியாது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாததால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும். இது இவர்களின் வளர்ச்சி, கற்றல் போன்றவற்றில் பாதிப்பைத் தரும். அதிக உயரத்துக்கு தகுந்த உடல் எடை இல்லாமல் போனால் இந்தக் குழந்தையும் எடைக்குறைந்த குழந்தையின் பாதிப்புக்களுக்கு உள்ளாவான். நாம் குழந்தையின் உயரம் மற்றும் எடையைக் கண்காணித்து வரவேண்டும்.

உயரம்/எடை அளவு ஆண் குழந்தைக்கு வேறு அளவு, பெண் குழந்தைக்கு வேறு அளவு என்பதை நாம் மறக்கக்கூடாது. சரியாக கவனித்து முறையாக வளர நாம்தான் உதவ வேண்டும். ஆரோக்கியாமான குழந்தைகளை வளர்ப்போம். அவர் நலன் காப்போம்

தொகுப்பு: பாபு நடேசன்

Tuesday, July 24, 2012

ஆப்பிள் ஹல்வா(குழந்தைகளுக்கு) 1 வயது முதல்

ஆப்பிள் ஹல்வா(குழந்தைகளுக்கு)

பரிமாறும் அளவு : முன்று குழந்தைகளுக்கு
  • ஆப்பிள் - இரண்டு
  • கிஸ்மிஸ் பழம் - கால் கப்
  • கெட்டியான பால் - ஒரு கப்
  • தண்ணீர் - கால் கப்
  • ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
  • முந்திரி, பாதம், பிஸ்தா, அக்ரூட் - தலா இரண்டு
  • சர்க்கரை - மூன்று மேசைக்கரண்டி
  • சப்ரான் - ஒரு பின்ச்
ஆப்பிளை தோலெடுத்து பொடியாக நறுக்கி அதில் கிஸ்மிஸ் பழத்தையும் போட்டு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பாதம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட்டை வெந்நீரில் ஊறவைத்து தோலெடுத்து அரைத்து கொள்ள வேண்டும்.
வேக வைத்த ஆப்பிள், கிஸ்மிஸை நன்கு மசித்து பால் சேர்த்து ஏலக்காய், சப்ரானும் சேர்த்து நன்றாக வேகவிட்டு வற்ற விடவும்.
பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

குறிப்பு :
இதில் பால், ஆப்பிள், நட்ஸ் எல்லாமே குழந்தைகளுக்கு சத்து தான் வாரம் ஒரு முறை செய்து கொடுக்கலாம். நல்ல போஷாக்கான ஹல்வா இதை ஒரு வயது குழந்தையிலிருந்து கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்தும் கொடுக்கலாம். ஆனால் வாயில் தட்டாமால் நல்ல மசிந்து இருக்கனும். பல் உள்ள பிள்ளைகள் என்றால் நட்ஸ் வகைகள் இன்னும் கொஞ்சம் நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.

வாழை பழ ஹல்வா(குழந்தைகளுக்கு) 1 வயது முதல்

  • ரவை - 100 கிராம்
  • சர்க்கரை - 100 கிராம்
  • வாழைப்பழம் - இரண்டு
  • நெய் (அ) பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
  • பால் - 50 மில்லி
  • தண்ணீர் - கால் கப்

ரவையை ஒரு மேசைக்கரண்டி பட்டரில் நன்கு வறுத்து எடுக்கவும்.
தண்ணீர் மற்றும் பாலில் வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி போட்டு கொதிக்க விட்டு ரவையும் தூவி கிளறி சர்க்கரை சேர்த்து சுருள கிளறவும். கடைசியில் மீதி நெய் (அ) பட்டரை சேர்த்து கிளறி ஒட்டாமல் ஹல்வா பததிற்கு வரும் போது இறக்கவும்.

குறிப்பு:
இது ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஒரு போஷாக்கான உணவாகும். தேவைப்பட்டால் கலர் பொடி சேர்த்து கொள்ளலாம்

சீஸ் வெஜிடபிள் சாதம் (8+ மாத குழந்தைகளுக்கு)


  1. சூடான சாதம் - 3/4 கப்
  2. சீஸ் க்யூப் - ஒன்று
  3. கேரட், பீன்ஸ், பீஸ் மூன்றையும் வேக வைத்தால் 3 தேக்கரண்டி வரவேண்டும்
  4. சாதத்தை வடித்து இறக்கியதும் சீஸ் க்யூப்பை போட்டு நன்கு மசித்து, காய்கறி வெந்ததும் சேர்த்து குழந்தைக்கு ஸ்பூனால் ஊட்டவும்.
  5. ருசியில் தயிர் சாதம் போலவும், ஆனால் இன்னும் குழந்தைகளுக்கு பிடித்த ருசியிலும் இருக்கும்.

குறிப்பு:
சில குழந்தைகள் சீஸே சாப்பிடாது. நமக்கு எப்படியாவது சாப்பிட்டு பார்க்க ஆசையாக இருக்கும். இப்படி செய்தால் சாதமும் சுவையாக இருக்கும் சீஸ் தனியாக சாப்பிடும்பொழுது புளிக்கும் இதற்கு புளிப்பு தெரியாது. காய்கறிகள் இல்லையென்றால் சேர்க்கத் தேவையில்லை.

ஆரோக்கிய உணவு (குழந்தைகளுக்கு)

குழந்தை ஆரோக்கியமாக வளர சுற்றமும் தாயன்பும் சத்தான உணவும் முக்கியம், குழந்தை இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கிய உணவு (குழந்தைகளுக்கு)
  • பாதாம் - 2
  • பிஸ்தா - 2
  • டேட்ஸ் - 2
  • அக்ரூட் - 2
  • திராட்சை - 2
  • முந்திரி - 2
  • பால் - தேவைக்கு
இவை அனைத்தையும் பாலில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின் அவற்றை பேஸ்ட் போலவோ அல்லது நீர்க மில்க் ஷேக் போலவோ அடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குறிப்பு:
மருத்துவர் 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதை தினமும் ஒரு முறை கொடுக்க சொல்கிறார். இது குழந்தைகளின் உடலை ஆரோகியமாக வைக்குமாம். அதே போல் 8 மாதத்துக்கு மேல் உள்ள குழந்தைகளின் உணவில் அவசியம் 1 தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணை சேர்த்து விட வேண்டும்.

கேழ்வரகு கஞ்சி (குழந்தைகளுக்கு)


குழந்தைக்கு எதை செய்துக் கொடுத்தாலும் அதனுடன் பொருமையையும் தங்களின் விலைமதிப்பில்லாத தாயன்பையும் சேர்த்து கொடுங்கள்.

குழந்தையை வளர்க்கும் தாய்,  சமூக பிரச்சினையையோ, குடும்ப பிரச்சினையையோ பற்றி கவலை படகூடாது. நீங்கள் உண்டு உங்கள் குழந்தை உண்டு என இருக்க பழகுங்கள். உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது.

கேழ்வரகு கஞ்சி (குழந்தைகளுக்கு)

பரிமாறும் அளவு : 2

  • கேழ்வரகு - 2 மேசைக்கரண்டி
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி
  • முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • கேழ்வரகினை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
  • பின்னர் கொதித்து கொண்டு இருக்கும் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள கேழ்வரகினை ஊற்றி கிளறவும்.
  • சுமார் 5 - 8 நிமிடம் வேகவிடவும். இடையிடையே நன்றாக கிளறிவிடவும்.
கடைசியில் சர்க்கரை (தேவைப்பட்டால்) சேர்த்து கலந்து கொடுக்கவும். குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.

குறிப்பு : உடலிற்கு மிகவும் நல்லது.