Tuesday, May 29, 2018

பெற்றோர்களின் கவனத்திற்கு | பள்ளி செல்லும் குழந்தைகள்

பள்ளி செல்லும் குழந்தைகளுடைய பெற்றோர்களின் கவனத்திற்கு !!

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையே ஆகும். இதை நீங்கள் சரியாக செய்து விட்டாலே போதும் உங்களின் குழந்தைகள் நீங்கள் நினைத்ததை விட வாழ்வில் சிறந்து விளங்குவார்கள். அதற்கு சில உதாரணத்தை இங்கு பார்க்கலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவை :

பொதுவாகவே ஒரு சில குழந்தைகள் அடம்பிடிக்காமல் பள்ளிக்கூடம் சென்று விடுவார்கள். ஆனால், சில குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். அந்த குழந்தைகளிடம், பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் ஆசிரியர் அடிப்பார்கள் என்று அவர்களை பயம் காட்டக்கூடாது. ஏனெனில், இவ்வாறு பயம்காட்டினால் ஆசிரியர்கள் நம்மை அடித்து துன்புறுத்துவார்கள் என்ற தவறான எண்ணம் அவர்களுக்குத் தோன்றும். எனவே, அவர்களின் மனதில் ஆசிரியர்களை பற்றிய தவறான எண்ணத்தை விதைக்காதீர்கள்.
மேலும், குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை அடித்து மிரட்டாமல், எந்த பாடம் புரியவில்லை என்று கேட்டு அவர்களுக்கு அன்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்களே சிறந்த வழிகாட்டி :
பெற்றோர்கள் தங்களின் சிறுவயதில் மருத்துவராகவோ, ஆசிரியராகவோ என ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டிருப்பார்கள். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்களின் ஆசை நிறைவேறாமல் இருந்திருக்கலாம். எனவே அந்த நிறைவேறாத ஆசைகளை குழந்தைகளின் மீது திணித்து நீ மருத்துவராக வேண்டும் அல்லது நீ ஆசிரியராக வேண்டும் என்று சொல்லக்கூடாது.

உங்கள் குழந்தைகளின் ஆசையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருங்கள். அவர்களின் இலட்சியத்தை அடைவதற்கு ஊக்குவியுங்கள்.
 
தொகுப்பு : பாபு நடேசன்

No comments:

Post a Comment