Tuesday, January 10, 2017

குழந்தைகளுக்கான உணவும், தற்காப்பு மருந்தும், தடுப்பூசிகளும்! பகுதி - 1

படித்ததில் பகிர்தந்து - நன்றி தி ஹிந்து 
பகுதி - 1
 
எந்தக் குழந்தைக்கும் அதன் உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான முழு உரிமை உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களை முன்கூட்டியே தடுக்கக் கூடிய தற்காப்பு மருந்தையும், தடுப்பூசியையும் பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை.
குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான அளவில் உணவு வழங்காமல் இருப்பது, தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி போடாமல் தவிர்ப்பது உரிமை மீறல் செயல். இவற்றின் மீது பெற்றோருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், அதற்காக குழந்தைகள் விஷயத்தில் தடுப்பு மருந்தையும், தடுப்பூசியையும் தவிர்க்கக் கூடாது.

கோட்பாடுகள், கொள்கை ரீதியாக மாற்றுக் கருத்தோ, மாற்று முடிவோ இருந்தாலும் அதற்காக குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பணயம் வைக்கக் கூடாது.

இதுகுறித்த விரிவான பார்வையைக் கொடுக்கும் நோக்கத்துடன் குழந்தைகளுக்கான உணவுகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் குறித்து குழந்தைகள் மருத்துவ நிபுணர் மற்றும் பேராசிரியர் டாக்டர் என்.கங்காவிடம் பேசினோம்.

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான உணவுகளைக் கொடுக்கலாம்?
குழந்தை பிறந்து 180 நாட்கள் ஆன பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து இயற்கையான குடும்ப சூழலுக்கு உகந்த நம் கலாச்சார உணவையே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். காலை உணவாக இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
காலை 11 மணி அல்லது மாலை 3 மணிக்கு ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, லெமன் ஆகியவற்றை ஆறிய வெந்நீர் மற்றும் உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து பழச்சாறாகக் கொடுக்கலாம். ஆனால், இதை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இளநீர், பானகம் போன்றவற்றையோ வடித்த கஞ்சியில் உப்பு அல்லது நெய் சேர்த்தோ கொடுக்கலாம்.

மதியம் சாதத்தை கரண்டி அல்லது மத்தில் மசியச் செய்து அதில் உப்பு மற்றும் வெந்நீர் கலந்து கொடுக்கலாம். ரசம், பருப்பு, சாம்பார், வேகவைத்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், எண்ணெய்ப் பொருட்கள், காரம் மிகுந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

மாலை சுமார் 5 மணிக்கு வாழைப்பழம், தோல் சீவி இட்லி தட்டில் வேகவைத்த ஆப்பிள், சப்போட்டா பழத்தின் கதுப்புப் பகுதி (சதைப் பகுதி) ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட ஐந்து தானியங்கள் அல்லது ஏழு தானியங்கள் அல்லது ஒன்பது தானியங்களை வறுத்து, அரைத்து சத்துமாவாக, கஞ்சியாக, கூழாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஒவ்வொருநாளும் சுவை மாற்றத்துக்காக உப்பு, வெல்லம், பால் என சத்துமாவில் கலந்து கொடுக்கலாம்.

பழங்கள் சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்று சொல்லப்படுகிறதே?
பழங்கள் சாப்பிடுவதால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்று பதற வேண்டாம். சளிக்கும் பழங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அறிவியல் உண்மை.

இரவு உணவை எப்போது வழங்கலாம்?
9 மாதங்களுக்குப் பிறகு இரவு உணவு வழங்கலாம். சுமார் 8 மணிக்கு இட்லி, இடியாப்பம், தோசை, சாதம் என எதுவாக இருந்தாலும் ஃபிரஷ் உணவாக இருக்க வேண்டும். காலையில் செய்து மிச்சமானது, ஃப்ரிட்ஜில் இருந்தது என இருக்கும் உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

அசைவ உணவை எப்போது கொடுக்கலாம்?
9-வது மாதம் முடிந்த பிறகு தட்டம்மை, தாளம்மை, புட்டாளம்மைக்கான தடுப்பூசி குழந்தைக்கு போடப்படும். அதற்குப் பிறகு குழந்தைக்கு முட்டை கொடுக்கலாம்.( அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தைச் சார்ந்த குடும்பத்தினராக இருந்தால்)

முதல் 15 நாட்களுக்கு அவிச்ச முட்டையின் மஞ்சள் கரு மட்டுமே கொடுக்க வேண்டும். சிலருக்கு செரிமானம் ஆவதில் தாமதம், உப்புசம், வயிற்றுப்போக்கு என வர நேரிடும். அதற்காக முட்டை கொடுப்பதை நிறுத்தக் கூடாது. வேண்டுமென்றால் 1 அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை முட்டை கொடுக்கலாம். 15 நாட்களுக்குப் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை சாப்பிடக் கொடுக்கலாம்.
அதற்குப் பிறகு மீன், ஈரல், கோழிக்கறி, எலும்பு சூப் ஆகியவற்றை குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம். 2 வயதுக்குப் பிறகே வேகவைத்த ஆட்டு இறைச்சியைத் தர வேண்டும். அந்த வயதில் தான் குழந்தைக்கு ஆட்டு இறைச்சி செரிமானம் ஆகும். 2 வயதுக்கு முன்பாக மட்டன் சூப் மட்டும் தரலாம்.

அசைவ உணவுக்கென்று ஒரு வாசனை உள்ளது. அந்த வாசனையை குழந்தை பழக வேண்டுமென்றால் ஒரு வயதுக்குள் அந்த ருசியை குழந்தைக்கு அறிய வைக்க வேண்டும். அப்போது பழக்காவிட்டால் குழந்தை அதற்குப் பிறகு அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

நன்றி : ஹிந்து - தமிழ் 

தொகுப்பு: பாபு நடேசன்

Wednesday, May 25, 2016

குழந்தைகளிடம் பொம்மைகளைத் தராதீர்கள்..! | இது ஒரு எச்சரிக்கை பதிவு!

குழந்தைகளிடம் பொம்மைகளைத் தராதீர்கள்..! | நன்றி கூட்டாஞ்சோறு



இது ஒரு எச்சரிக்கை பதிவு!

குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக பல வண்ணங்களிலும் பல மாடல்களிலும் ஏராளமான பொம்மைகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நாமும் தொடர்ந்து இத்தகைய பொம்மைகளை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். 

குழந்தைகள் விளையாடும் இந்த பொம்மைகள் 'பி.வி.சி.' என்று சொல்லப்படுகிற 'பாலிவினைல் குளோரைடு' என்ற பொருளில் இருந்து தயாரிக்கிறார்கள். பாட்டில், நிப்பிள், ரப்பர் வாத்துக்கள், பல் முளைக்கும் போது கடிப்பதற்காக கொடுக்கப்படும் சிறு விளையாட்டுப் பொருட்கள் என எல்லா வகையறாக்களும் இந்த பொருளால் தயாரிக்கப்படுபவைதான். 


பி.வி.சி. என்பது சாதாரணமாக வளையும் தன்மை கொண்ட பொருள் கிடையாது. அதனால், இந்த பி.வி.சி.-யை வளைப்பதற்காக இதனுடன் 'பதாளேட் பிளாஸ்டிஸைசர்' என்கிற ஒரு பொருளை சேர்கிறார்கள். இது சேரும் போது பிவிசி வளையும் தன்மையை பெறுகிறது. இப்படியாக வளையும் தன்மைக் கொண்ட 'வினைல் பொருட்கள்' பல ஆண்டுகளாக உடையாமலும் வண்ணம் மாறாமலும் இருக்கும். 


வளைப்பதற்காக சேர்க்கப்படும் 'பதாளேட்' என்ற பொருள் விளையாட்டுப் பொருட்களின் எடையில் பாதியளவு கலந்திருக்கும். இது பிவிசியுடன் வேதி முறையில் இணைக்கப்படுகிறது. பதாளேட் பொருட்களை குழந்தைகள் வாயில் கடித்து விளையாடினால் அது கசிந்து வாய்க்குள் போகும். பிளாஸ்டிஸைசர் குழந்தைகளின் எச்சிலில் கரையக்கூடியது.


இப்படி கரைந்த பிளாஸ்டிஸைசர்கள் ரத்தம், நுரையீரல், கல்லீரல் போன்ற இடங்களில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இது எண்ணெய் மற்றும் கொழுப்பிலும் கரையக்கூடியது. பிளாஸ்டிஸைசர் தரும் தீமைகள் பற்றி ஏராளமான ஆய்வுகள் இருக்கின்றன. அவற்றின் முடிவுகள் படி இந்த வேதிப் பொருட்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் புண்களை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. மேலும் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்னையை ஏற்படுத்தும். விந்து உருவாவதிலும் கருமுட்டை உருவாக்கத்திலும்  இடையூறு செய்யும். கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இடங்களில் கேன்சரையும் 'மோனோநியூக்கிளியர் செல்லுக்கேமியா'வையும் உருவாக்குவதாக தெரிவிக்கிறது.


குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த தீமைகளை கண்டபின்னாவது அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து பிவிசி மூலம் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பெரும் கெடுதல் தருகிற 'வினைல்' மற்றும் 'பிளாஸ்டிஸைசர்' உபயோகப்படுத்துவதை தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன. கூடுமானவரை நாம் நமது குழந்தைகளுக்கு பிவிசி விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பதே நல்லது. நம் குழந்தைகளுக்கு நாம் தரும் ஆரோக்கியம் அது. 



நன்றி கூட்டாஞ்சோறு