Tuesday, January 10, 2017

குழந்தைகளுக்கான உணவும், தற்காப்பு மருந்தும், தடுப்பூசிகளும்! பகுதி - 1

படித்ததில் பகிர்தந்து - நன்றி தி ஹிந்து 
பகுதி - 1
 
எந்தக் குழந்தைக்கும் அதன் உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான முழு உரிமை உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களை முன்கூட்டியே தடுக்கக் கூடிய தற்காப்பு மருந்தையும், தடுப்பூசியையும் பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை.
குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான அளவில் உணவு வழங்காமல் இருப்பது, தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி போடாமல் தவிர்ப்பது உரிமை மீறல் செயல். இவற்றின் மீது பெற்றோருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், அதற்காக குழந்தைகள் விஷயத்தில் தடுப்பு மருந்தையும், தடுப்பூசியையும் தவிர்க்கக் கூடாது.

கோட்பாடுகள், கொள்கை ரீதியாக மாற்றுக் கருத்தோ, மாற்று முடிவோ இருந்தாலும் அதற்காக குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பணயம் வைக்கக் கூடாது.

இதுகுறித்த விரிவான பார்வையைக் கொடுக்கும் நோக்கத்துடன் குழந்தைகளுக்கான உணவுகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் குறித்து குழந்தைகள் மருத்துவ நிபுணர் மற்றும் பேராசிரியர் டாக்டர் என்.கங்காவிடம் பேசினோம்.

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான உணவுகளைக் கொடுக்கலாம்?
குழந்தை பிறந்து 180 நாட்கள் ஆன பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து இயற்கையான குடும்ப சூழலுக்கு உகந்த நம் கலாச்சார உணவையே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். காலை உணவாக இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
காலை 11 மணி அல்லது மாலை 3 மணிக்கு ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, லெமன் ஆகியவற்றை ஆறிய வெந்நீர் மற்றும் உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து பழச்சாறாகக் கொடுக்கலாம். ஆனால், இதை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இளநீர், பானகம் போன்றவற்றையோ வடித்த கஞ்சியில் உப்பு அல்லது நெய் சேர்த்தோ கொடுக்கலாம்.

மதியம் சாதத்தை கரண்டி அல்லது மத்தில் மசியச் செய்து அதில் உப்பு மற்றும் வெந்நீர் கலந்து கொடுக்கலாம். ரசம், பருப்பு, சாம்பார், வேகவைத்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், எண்ணெய்ப் பொருட்கள், காரம் மிகுந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

மாலை சுமார் 5 மணிக்கு வாழைப்பழம், தோல் சீவி இட்லி தட்டில் வேகவைத்த ஆப்பிள், சப்போட்டா பழத்தின் கதுப்புப் பகுதி (சதைப் பகுதி) ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட ஐந்து தானியங்கள் அல்லது ஏழு தானியங்கள் அல்லது ஒன்பது தானியங்களை வறுத்து, அரைத்து சத்துமாவாக, கஞ்சியாக, கூழாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஒவ்வொருநாளும் சுவை மாற்றத்துக்காக உப்பு, வெல்லம், பால் என சத்துமாவில் கலந்து கொடுக்கலாம்.

பழங்கள் சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்று சொல்லப்படுகிறதே?
பழங்கள் சாப்பிடுவதால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்று பதற வேண்டாம். சளிக்கும் பழங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அறிவியல் உண்மை.

இரவு உணவை எப்போது வழங்கலாம்?
9 மாதங்களுக்குப் பிறகு இரவு உணவு வழங்கலாம். சுமார் 8 மணிக்கு இட்லி, இடியாப்பம், தோசை, சாதம் என எதுவாக இருந்தாலும் ஃபிரஷ் உணவாக இருக்க வேண்டும். காலையில் செய்து மிச்சமானது, ஃப்ரிட்ஜில் இருந்தது என இருக்கும் உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

அசைவ உணவை எப்போது கொடுக்கலாம்?
9-வது மாதம் முடிந்த பிறகு தட்டம்மை, தாளம்மை, புட்டாளம்மைக்கான தடுப்பூசி குழந்தைக்கு போடப்படும். அதற்குப் பிறகு குழந்தைக்கு முட்டை கொடுக்கலாம்.( அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தைச் சார்ந்த குடும்பத்தினராக இருந்தால்)

முதல் 15 நாட்களுக்கு அவிச்ச முட்டையின் மஞ்சள் கரு மட்டுமே கொடுக்க வேண்டும். சிலருக்கு செரிமானம் ஆவதில் தாமதம், உப்புசம், வயிற்றுப்போக்கு என வர நேரிடும். அதற்காக முட்டை கொடுப்பதை நிறுத்தக் கூடாது. வேண்டுமென்றால் 1 அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை முட்டை கொடுக்கலாம். 15 நாட்களுக்குப் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை சாப்பிடக் கொடுக்கலாம்.
அதற்குப் பிறகு மீன், ஈரல், கோழிக்கறி, எலும்பு சூப் ஆகியவற்றை குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம். 2 வயதுக்குப் பிறகே வேகவைத்த ஆட்டு இறைச்சியைத் தர வேண்டும். அந்த வயதில் தான் குழந்தைக்கு ஆட்டு இறைச்சி செரிமானம் ஆகும். 2 வயதுக்கு முன்பாக மட்டன் சூப் மட்டும் தரலாம்.

அசைவ உணவுக்கென்று ஒரு வாசனை உள்ளது. அந்த வாசனையை குழந்தை பழக வேண்டுமென்றால் ஒரு வயதுக்குள் அந்த ருசியை குழந்தைக்கு அறிய வைக்க வேண்டும். அப்போது பழக்காவிட்டால் குழந்தை அதற்குப் பிறகு அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

நன்றி : ஹிந்து - தமிழ் 

தொகுப்பு: பாபு நடேசன்

Wednesday, May 25, 2016

குழந்தைகளிடம் பொம்மைகளைத் தராதீர்கள்..! | இது ஒரு எச்சரிக்கை பதிவு!

குழந்தைகளிடம் பொம்மைகளைத் தராதீர்கள்..! | நன்றி கூட்டாஞ்சோறு



இது ஒரு எச்சரிக்கை பதிவு!

குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக பல வண்ணங்களிலும் பல மாடல்களிலும் ஏராளமான பொம்மைகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நாமும் தொடர்ந்து இத்தகைய பொம்மைகளை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். 

குழந்தைகள் விளையாடும் இந்த பொம்மைகள் 'பி.வி.சி.' என்று சொல்லப்படுகிற 'பாலிவினைல் குளோரைடு' என்ற பொருளில் இருந்து தயாரிக்கிறார்கள். பாட்டில், நிப்பிள், ரப்பர் வாத்துக்கள், பல் முளைக்கும் போது கடிப்பதற்காக கொடுக்கப்படும் சிறு விளையாட்டுப் பொருட்கள் என எல்லா வகையறாக்களும் இந்த பொருளால் தயாரிக்கப்படுபவைதான். 


பி.வி.சி. என்பது சாதாரணமாக வளையும் தன்மை கொண்ட பொருள் கிடையாது. அதனால், இந்த பி.வி.சி.-யை வளைப்பதற்காக இதனுடன் 'பதாளேட் பிளாஸ்டிஸைசர்' என்கிற ஒரு பொருளை சேர்கிறார்கள். இது சேரும் போது பிவிசி வளையும் தன்மையை பெறுகிறது. இப்படியாக வளையும் தன்மைக் கொண்ட 'வினைல் பொருட்கள்' பல ஆண்டுகளாக உடையாமலும் வண்ணம் மாறாமலும் இருக்கும். 


வளைப்பதற்காக சேர்க்கப்படும் 'பதாளேட்' என்ற பொருள் விளையாட்டுப் பொருட்களின் எடையில் பாதியளவு கலந்திருக்கும். இது பிவிசியுடன் வேதி முறையில் இணைக்கப்படுகிறது. பதாளேட் பொருட்களை குழந்தைகள் வாயில் கடித்து விளையாடினால் அது கசிந்து வாய்க்குள் போகும். பிளாஸ்டிஸைசர் குழந்தைகளின் எச்சிலில் கரையக்கூடியது.


இப்படி கரைந்த பிளாஸ்டிஸைசர்கள் ரத்தம், நுரையீரல், கல்லீரல் போன்ற இடங்களில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இது எண்ணெய் மற்றும் கொழுப்பிலும் கரையக்கூடியது. பிளாஸ்டிஸைசர் தரும் தீமைகள் பற்றி ஏராளமான ஆய்வுகள் இருக்கின்றன. அவற்றின் முடிவுகள் படி இந்த வேதிப் பொருட்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் புண்களை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. மேலும் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்னையை ஏற்படுத்தும். விந்து உருவாவதிலும் கருமுட்டை உருவாக்கத்திலும்  இடையூறு செய்யும். கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இடங்களில் கேன்சரையும் 'மோனோநியூக்கிளியர் செல்லுக்கேமியா'வையும் உருவாக்குவதாக தெரிவிக்கிறது.


குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த தீமைகளை கண்டபின்னாவது அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து பிவிசி மூலம் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பெரும் கெடுதல் தருகிற 'வினைல்' மற்றும் 'பிளாஸ்டிஸைசர்' உபயோகப்படுத்துவதை தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன. கூடுமானவரை நாம் நமது குழந்தைகளுக்கு பிவிசி விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பதே நல்லது. நம் குழந்தைகளுக்கு நாம் தரும் ஆரோக்கியம் அது. 



நன்றி கூட்டாஞ்சோறு

Friday, November 13, 2015

குழந்தை வளர்ப்பும் பழக்கவழக்கமும் | பாபு நடேசன்

அனைவருக்கும் வணக்கம் 

இந்த பகுதி குழந்தை வளர்ப்பு பற்றி பொதுவான கருத்தை பதிவு செய்வதாகும் | ஏதேனும் குறைகள் இருப்பின் பின்னூட்டத்தில்  தெரிவிக்கவும் 

குழந்தைப் பருவத்தில் அவர்களை வளர்க்கும் விதம்தான் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது, குழந்தைகள் சிலவற்றை பார்த்து கற்றுக்கொள்ளும் சிலவற்றை அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகள் பொது இடங்களில், உறவினர்கள் வீட்டில் , தொலைகாட்சிகளில் சில நல்ல விசயங்களை கற்றுக்கொள்கிறது. பெற்றோர்களாகிய நாம் தான் குழந்தைகளுக்கு நல்ல விசயங்களை கற்றுகொடுக்க வேண்டும். 

இளம் வயதில்தான் குழந்தைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கமுடியும். குழந்தைகளை பயப்படும்படி செய்ய வேண்டாம். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டேயிருங்கள் அல்லது கற்பித்துக் கொண்டேயிருங்கள். அவசரப்படாதீர்கள். கண்டிப்பாக மாறிவிடுவார்கள்.


குழந்தைகளை அதிகம் தொலைகாட்சி பார்க்க அனுமதிக்க வேண்டாம். மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்ளும். எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை தொலைகாட்சி பார்க்க வைப்பதை விட, சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசி மகிழுங்கள். மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள்.



குழந்தைகளுக்கு ஒரு சில விசயங்களை சொல்லிக் கொண்டேயிருங்கள் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும்போது காலம் தவறாது செல்ல வேண்டும், பள்ளிக்குச் செல்லும்போது சீருடை அணிந்து மட்டும் தான் செல்லவேண்டும், ஏன் சீருடை அணிகிறோம் என்பதற்கு சில எடுத்துக்காட்டை கூறுங்கள், பள்ளியின் வீட்டுப் பாடத்தை ஒரு குறிப்பிட்ட நேரப்படி முடிக்க கற்றுக்கொடுங்கள்.


 












தப்பு செய்வது மனித இயல்பு; தப்பு செய்யும் போது அன்புடன் கண்டியுங்கள், போக போக அவர்களை மாற்றம் பெறுவார்கள், பயம் கொள்ள வேண்டாம்.  
 
குழந்தைகளுக்கு படுக்கைக்கு செல்லும்போது கதைகளை சொலுங்கள், சொல்லப்படும் கதைகளில் அறிவு, வீரம், நீதி, தைரியமிக்க கருத்துக்கள் கதைகளை சொல்லுங்கள். இதனால் குழந்தைகளின் கற்பனை திறம் அதிகரிக்கும். நுண்ணறிவு திறனும் வளரும்.


நல்ல அறிவுள்ள தமிழ் கதைககளை படிக்க இங்கே செல்லுங்கள் [தமிழ் அறிவு கதைகள் [{http://tamilarivukadhaikal.blogspot.in}]
இன்னும் நிறைய இருக்கிறது, அடுத்த வாரம் சிந்திப்போம் 
தொகுப்பு:-
பாபு நடேசன்


Wednesday, January 7, 2015

புதிய தாய்மார்கள் எச்சரிக்கையாக இருக்க சில அறிவுரைகள் | குழந்தை வளர்ப்பு

நாம் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் சில தவறுகள் செய்து விடுவது உண்டு. குழந்தை வளர்ப்பு என்பது சதாரணமான விஷயம் அல்ல. குழந்தை பிறந்தது முதல் நமது கவனம் முழுக்க அவர்கள் மீதே இருக்க வேண்டும். அதுவும் அவர்கள் தவள ஆரம்பித்து விட்டால் நமது வேலை கண்டிப்பாக அதிகம் தான்.

புதிய தாய்மார்கள் எச்சரிக்கையாக இருக்க சில அறிவுரைகள்



கணவர் வீட்டில் இருக்கும் போது எல்லா வேலைகளையும் முடித்து கொள்ளுங்கள் அதன் பின் முழு நேரமும் ஒரு வினாடி கூட‌ அசராமல் குழந்தையை கண்காணிப்பதற்கே முழு நேரமும் எடுத்து கொள்ளூங்கள்..

குழந்தை தவளும் நிலையில் குழந்தையை கட்டிலில் தூங்க போடுவது மிக தவறு. கீழே படுக்கை விரித்து தூங்க வைப்பது சிறந்தது.

குழந்தை தவள‌ ஆரம்பித்து விட்டால் வீட்டை சுத்தமானதாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளூங்கள்..

எதாவது ஒரு பொருளை கீழே போடும் முன் அதை நம் குழந்தை வாயில் போட்டுவிடும் என்பதை மனதில்வைத்து குப்பையில் போடுங்கள்

அவர்களூக்கு கை எட்டும் அளவில் சுவிட்ச் பாக்ஸ் ஹோல்டர் இருந்தால் அதை கருப்பு நிற‌ இன்சுலேசன் டேப் போட்டு அடைத்துவிடுங்கள்..

ஆபத்தான‌ பொருட்கள் (பெட்ரோல்,, வேதியல் பொருட்கள்..மருந்து) இருந்தால் அதை குழந்தைக்கு தெரியாமல் பார்துகொள்ளூங்கள்..

முக்கியமாக‌ தோடு தோட்டின் திருகாணி மோதிரம் எதையும் மறந்து வைத்து விட்டால் அல்லது படுக்கையில் விழுந்து விட்டால் அதை உடனே எடுத்து விடுங்கள் அதை எளிதில் வாயில் போட்டு கொள்ளுவார்கள்..

பால்கணியில் துனி காயவைபவர்கள் குழந்தையின் முன் வெளியே செல்லாமல் அவர்கள் தூங்கும் போதோ இல்லை யாராவது வீட்டில் இருக்கும் போது செய்யுங்கள்..

குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது கவணமாக‌ கொடுக்கனும்.. தேன் போன்ற‌ திக்கான‌ சிரப்புகள் இருந்தால் அதை கொஞ்சம் சுடுதண்ணீயில் கலந்து கொடுக்கவும்.. குழந்தை அழுகும் போது இப்படி திக்கான‌ மருந்து கொடுத்தால் தொண்டையில் கட்டி விடும் பிறகு குழந்தை மூச்சுவிடாமல் தடுமாறும்

குழந்தைங்க இருக்குற வீட்டுல தாழ்ப்பாள் போடும் மற்றொரு கதவின் ஓட்டைகளை காகிதங்களை அல்லது மர கட்டைகளை கொண்டு பகல் நேரங்களில் அடைத்து விடுங்கள்.

இது குழந்தைகள் தாழ் போடுவதை தடுக்கும். சற்று கவனிக்காமல் போனாள் அவர்கள் தாழ் போட்டு கொள்வார்கள் அல்லது உங்களை தாழ் போட்டு விடுவார்கள்.

கதவுகளில் கூர்மையான பகுதிகளை எதாவது கொண்டு மறைக்கவும். வீட்டின் தரையில் தண்ணீர் இல்லாதவாறு பார்த்து துடைத்து விடவும்

தொகுப்பு: குழந்தை வளர்ப்பு-Child Care | பாபு நடேசன்

Tuesday, December 16, 2014

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்க

ஓடியாடி வால் தனம் செய்யும் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் உங்கள் வீட்டில் இருக்கின்றனரா? அப்புறம் என்ன மேலே தொடருங்கள்.

உங்களுக்குத் தெரியுமா? சுய ஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால் தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது; சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. 

பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் இதோ..

முதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் குழந்தை விலை மதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிர் என்பதை நீங்கள் உணர்வதோடு அதை குழந்தையும் உணருமாறு நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி, அது எத்துணை சிறிய செயலாக இருந்தாலும், உடனுக்குடன் பாராட்டி கருத்துக்களைக் கூறுங்கள். “அது சற்று கடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையில் முயற்சித்தாய்” என்று பாராட்டுவது குழந்தையின் முகத்தையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கும்.

குழந்தைகளின் சின்னச் சின்ன தவறுகள் குற்றங்களல்ல; அவை புரிந்து வளர்வதற்கான படிப்பினைகள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.

குழந்தைகள் பேசும்போது மிகுந்த உன்னிப்பாக கவனிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனிப்பதற்கு அடையாளமாக உடனுக்குடன் கலந்துரையாடி குழந்தைகள் தொடர்ந்து பேச  உற்சாகமளியுங்கள். 

உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆமோதித்து அவற்றை வார்த்தைகளாக வெளியிட உதவுங்கள்.

விமர்சியுங்கள் - குழந்தைகளை அல்ல; குழந்தையின் பழக்க
வழக்கங்களை! இதைச் செய்யும்போது மிக கவனமாக கத்தி மீது நடப்பதுபோல செய்ய வேண்டும். அளவிற்கு அதிகமான விமர்சனம் குழந்தையைக் காயப்படுத்தும். ஆனால் ஒன்றில் உறுதியாக இருங்கள். உங்கள் விமர்சனம் குழந்தையின் பழக்க வழக்கம் அல்லது செயல் பற்றியதாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, குழந்தையைப் பற்றி
அல்ல.

குழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு
ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவனியுங்கள். முடிந்தால் இடையிடையே சில கருத்துகளையும் தெரிவியுங்கள்.

குழந்தை வெளியிடும் அதன் பயம் அல்லது பாதுகாப்பின்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள். குழந்தையின் பயம் அர்த்தமற்றதாக இருப்பினும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருப்பதாகக் கூறினால், அதை எளிதாகச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கூறி ஆறுதல் படுத்துங்கள்.

குழந்தை சுதந்திரமாக செயல்பட ஊக்கமளியுங்கள். தனியாகப் புதுப்புது முயற்சிகள் செய்ய வாய்ப்பளியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். தோல்வி வேறு
புதிய முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்தும்.

எப்பொழுதும் குழந்தையுடன் சேர்ந்து சிரித்து மகிழுங்கள்.

குழந்தைக்கு எதில் அதிக ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்த கவனம் செலுத்த குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். அது நடனமாகவோ, ஓவியமாகவோ, விளையாட்டாகவோ.. எதுவாயினும் சரி.. உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் கூட!


உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு...

நீங்கள்
பல முறை எச்சரித்தும், கேளாமல் உங்கள் குழந்தை ஒரு கையில் டம்ளர் வழிய பாலும், மற்றொரு கையில் உணவு தட்டும் கொண்டு வருகிறது. வழியில் கால் தவறி கீழே சிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?

“நான் முன்பே உன்னிடம் பல முறை எச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பாரு.. இப்போ என்ன ஆச்சுன்னு” என்பது போல இருக்கிறதா?

அப்படியென்றால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச்  சொன்னால் குழந்தையின் உணர்வுகள், கீழே சிந்தியதை விட மோசமாக பாதிக்கப்படும்.

மாறாக, இப்படிச் சொல்லிப் பாருங்கள்!

“நீ நன்றாக முயற்சி செய்தாய்.. முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை! அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத்து வா. தடுமாறாமல் எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.”

வண்ணத்துப் பூச்சி போல பறக்கும் உங்கள் குழந்தை!

எனவே, குழந்தையைத் திருத்துவதாக நினைத்து எதையும் நேரடியாகக் கூறக் கூடாது.  குழந்தையின் தன்னம்பிக்கையைக் குலைக்காத வண்ணம் எப்படிக் கூறவேண்டும் என தீர்மானித்து சொல்ல வேண்டும்.

குழந்தையின் காதுபட எவரிடமும் குழந்தையைப் பற்றி குறையாக ‘சாப்பிட அடம் பிடிக்கிறாள் ; அழுகிறாள்’ என்று அடுக்கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று குழந்தை எண்ண ஆரம்பித்து விடும். இவ்வெண்ணம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்களைப் பற்றி நீங்களே கூறும் சுயவிமர்சனமும் குழந்தையின் ஆளுமையை மாற்றக்கூடும். பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் போல.
அதிலும், தன் மனம் கவர்ந்த பெரியவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புவர்.

நீங்கள் ஏதாவது ஒரு செய்திக்கு அல்லது பிரச்சனைக்குக் கொஞ்சம்
அதிகப்படியாக அலட்டிக் கொண்டால்... அவ்வளவுதான்! குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? வாழ்வின் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று எண்ணி கவலைப்படும். இது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைச் சிதைக்கும்.

குழந்தையிடம் பேசுவதற்கு முன் நன்றாக யோசித்து சரியான
சொற்களையே தேர்ந்தெடுங்கள்! குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அல்லது அனாவசிய கேள்வி கேட்டால் ‘முட்டாள் மாதிரி செய்யாதே’, ‘நீ ரொம்ப பிடிவாதம்’ என்று குழந்தைகளைக் கடிந்து கொள்வது இயல்பு. ஆனால் இவற்றை அதிகமாக அடிக்கடி கூறுவதால் ‘நாம் அது மாதிரிதானோ’ என்ற எண்ணம் குழந்தையிடம் ஏற்படலாம். எனவே எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.

இவையெல்லாம் எளிதாக பின்பற்றக் கூடியவை. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து பின்பற்ற ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான உலகைக் காண முடியும் அல்லவா?

உங்களது மேலான கருத்துக்களையும், குழந்தைகளுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே..

Monday, December 8, 2014

குழந்தை வளர்ப்பு | சிறப்பு பதிவு

குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் எல்லோரும் கேட்கும் கேள்வி “குழந்தையின் எடை என்ன?” இது பிறந்திருக்கும் குழந்தை ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை அறிந்துக்கொள்ள இப்படி கேட்கிறோம்

குழந்தைக்கு ஒரு வருடம் ஆகும் வரை எல்லா மாதமும் குழந்தையை மருத்துவ நிபுணரிடம் காட்டி எடை, உயரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.



தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. சாப்பிட வைப்பதே பெரும்பாடாக தான் இருக்கும். அப்போதுதான் நாம் நம் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கும். குழந்தையின் வளர்ச்சியில் உயரமும், எடையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தந்த வயதுக்கு இருக்கவேண்டிய உயரத்துக்குரிய எடை நம் குழந்தை அடைந்திருக்கிறதா என்று ஒவ்வொரு மாதமும் பார்க்க வேண்டும். அதிக எடையோ, அல்லது குறைவான எடையோ இருந்தால் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

அதிக எடை:

அதிக எடை ஏற்படும் பொழுது குழந்தைகள் சர்க்கரை வியாதிக்குள்ளாகிறார்கள் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. அதீத உணவு, துரித உணவு, குறைவான உடற்பயிற்சி இவைதான் குண்டு குழந்தைகளுக்கான காரணங்கள். இதனை சரி செய்து சரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து சரியான எடைக்கு கொண்டு வந்துவிடலாம்.

குறைவான எடை:

இந்தவகை குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பல. உடலில் தெம்பில்லாது போவதால் சோம்பலாக இருப்பார்கள். அதிகம் ஓடியாடி விளையாட முடியாது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாததால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும். இது இவர்களின் வளர்ச்சி, கற்றல் போன்றவற்றில் பாதிப்பைத் தரும். அதிக உயரத்துக்கு தகுந்த உடல் எடை இல்லாமல் போனால் இந்தக் குழந்தையும் எடைக்குறைந்த குழந்தையின் பாதிப்புக்களுக்கு உள்ளாவான். நாம் குழந்தையின் உயரம் மற்றும் எடையைக் கண்காணித்து வரவேண்டும்.

உயரம்/எடை அளவு ஆண் குழந்தைக்கு வேறு அளவு, பெண் குழந்தைக்கு வேறு அளவு என்பதை நாம் மறக்கக்கூடாது. சரியாக கவனித்து முறையாக வளர நாம்தான் உதவ வேண்டும். ஆரோக்கியாமான குழந்தைகளை வளர்ப்போம். அவர் நலன் காப்போம்

தொகுப்பு: பாபு நடேசன்